Tuesday, November 15, 2011

ஜன்னலோர இருக்கை




ஜன்னலோர இருக்கை 

“சின்ன பையன், அவன் உட்காரட்டும்”
ஜன்னல்சீட்டுக்கு அடம் பிடித்த தம்பிக்கு
அம்மாவின் பரிந்துரையில் சீட் கிடைத்தது

ஓசியில போறவனுக்கு எதுக்கு சீட்டு?
பள்ளிக்கு செல்லும் போது நடத்துனர் தயவில்
அரசு பேருந்திலும் அமர்ந்ததில்லை.

விமானத்தில், ரயில் பயணங்களில்
எப்போதும் ஒரு நடுத்தர வயதுடையவர்
ஜன்னலில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பார்.


எதேச்சையாக ஒரு மழை நாளில் ரயிலில்
ஜன்னலோர இருக்கை காலியாக இருந்தது. 

ஓடிச்சென்று அமர்ந்தேன்.

வெளியே நீட்டிய கையை மழைச்சாரல் நனைத்தது
வண்டி கிளம்பியதும் யாரோ சொன்னார்கள்
“சார், ஜன்னல மூடுங்க!
மழை தண்ணி உள்ள வந்துடும்!”

வேகம் பிடித்த மழை
ஜன்னல் கண்ணாடியை நனைத்தது
வெளியே யாரோ ஒரு குழந்தை
வழியனுப்பி கையசைத்தது மங்கலாக தெரிந்தது!

No comments:

Post a Comment