Wednesday, February 2, 2011

அழிவின் விளிம்பில் தொன்மங்கள்


நேர்காணல்: சுகவன முருகன்
கிருஷ்ணகிரி பகுதி: ஆதிக்குடிகளின் நிலம் அறியப்படாத வளம்

"புது எழுத்து' மனோன்மணி என்று இலக்கிய உலகில் அறியப்படுகிற சுகவன முருகன்,கவிஞர். அவரது "கலவரம்' கவிதைத் தொகுப்பு பரவலாகக் கவனம் பெற்றது.கருவூலத்துறை பணியிலிருந்து விலகி ஆசிரியப்பணியை விரும்பி ஏற்றுள்ளவர்.வடதமிழகத்தின், குறிப்பாக கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள தொல்லியல் வளங்களைத்தேடித்தேடி கண்டடைவதில் பேரார்வம் கொண்டவர். தொல்லியல் சான்றுகளின்சுரங்கம் போன்றிருக்கும் இப்பகுதியின் காடுகளும் மலைகளும் கனிமவளங்களெனஆட்சியாளர்களால் தவறுதலாகப் பொருள்மாற்றம் கொள்ளப்பட்டு கிரானைட்பாளச்சில்லுகளாக சிதறடிக்கப்படும் அழிவு குறித்த அவரது பெருந்துயரம்இந்தச்சமூகம் முழுவதற்குமானது. கலை இலக்கியம், புது எழுத்து பத்திரிகை மற்றும்நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான தொடர்புகள், அவர்களது ஆக்கங்கள் மீதானவிமர்சனம், சமகால நடப்புகள், கல்வி என்று மனோன்மணியிடம் நிகழ்த்திய மிகவிரிவான உரையாடலின் சிறுபகுதி மட்டுமே இது. தனது புகைப்படத்திற்குப் பதிலாகதான் பெரிதும் நேசிக்கும் தொல்லியல் சான்றுகளின் படம் ஒன்று கூடுதலாக வெளியிடப்படுவதையே 
விரும்புகிறவராயிருக்கிறார் மனோன்மணி. - புதுவிசை 

புதுவிசை:தொல்லியலில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

சுகவன முருகன்: அப்பாவுக்கு வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. கல்லூரிப் படிப்புமுடித்திருந்த சமயத்தில் கடத்தூர் புது. பொ. வெங்கட் ராமன், காவேரிப்பட்டிணம். துரைசாமி மற்றும் கிருஷ்ணகிரி நிசாதுதீன் அகமது ஆகிய மூன்று தொல்லியல்அறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட் டது. திரு. புது.பொ. வெங்கட்ராமன் தமிழாசிரியராக பணியாற்றியவர். சேலம் அருங்காட்சியகத்தின் முதல் காப்பாட்சியர். சங்காலியா,தவ்லிகர், நரசிம்மய்யா போன்ற தொல்லியல் அறிஞர்களுடன் பழைய ஒருங்கிணைந்தசேலம் மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள மேற்கொண்டவர். திரு. துரைசாமிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தவர். திரு. நிசாதுதீன் அகமது தொல் பழங்காலம் மற்றும் நாணயவியலிலும்
வல்லவர். இவர்களுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்து திரிந்ததில் இலக்கியத்தைவிட தொல்லியல் அதிகமாக ஒட்டிக்கொண்டது. அதனால்தான் புது எழுத்து தமிழக தொல்லியல் கழகம், தஞ்சாவூருடன் இணைந்து 2006ல் தமிழக அளவில் தொல்லியல் கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தியது.

போடரஹள்ளி ஈமச்சின்னம்

கிருஷ்ணகிரி பகுதி என்பதற்கான உத்தேச எல்லை எது?

புவியியல் ரீதியாக ஒரு பரந்து பட்ட பகுதி இது. ஆந்திராவின் குப்பம், பலமனேர் பகுதி, கர்நாடகாவின் கோலார், பெங்களூர், மைசூரின் ஒரு பகுதி, தமிழகத்தின் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரியில் அரூர் வட்டம், திருவண்ணாமலையில் செங்கம் வட்டம், வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய பெரிய பரப்பைஉள்ளடக்கியது.

தொப்பூரும் இந்தப் பரப்புக்குள் வருகிறதா?

தொப்பூர் மலைப்பகுதி தகடூர் பரப்புகளில் முக்கியமான ஒன்று. ராஜேந்திர சோழனின் முரசுகளில் ஒன்று நெருப்பூரில் இருப்பதாக தகவல் உள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய சான்றுகள் எவை? என்னென்னஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

கிருஷ்ணகிரி பகுதியில் எங்கு தடுக்கி விழுந்தாலும் அந்த இடம் ஒரு பெருங்கற்காலநாகரிகப் பகுதியாக இருக்கும். பழைய கற்காலம், புதிய கற்காலம் மற்றும்இரும்புக்காலம் தொடர்ந்து தற்காலம்வரை தொல்லியல் சின்னங்கள் அதிகளவில்இப்பகுதியில்தான் கிடைக்கின்றன. குடியம், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களின் மீது காட்டப்படும் அக்கறை இப்பகுதியில் காட்டப்படவில்லை. வரட்டனப்பள்ளியில் ஒரே இடத்தில் கற்கால ஆயுதங்கள் லாரி லாரியாக குவிந்து கிடக்கின்றன. இதனை தொல்லியல் அறிஞர்கள் தொழிற்சாலைப் பகுதி என்கிறார்கள்! கற்கால மனிதன்வேட்டையாடும் கருவிகளுக்கு தொழிற்சாலையா வைத்திருந்தான்? தேவைக்கு மிஞ்சிய எதையும் வைத்துக் கொண்டிராத அல்லது யோசிக்கத் தோன்றாத மனிதனாக இருந்தவன் ஆயிரக்கணக்கில் கல்லாயுதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரே இடத்தில் இவ்வளவு குவியல் குவியலாக கல்லாயுதம் கிடைக்கக் காரணம் என்ன?

அடுத்து குட்டூர் மலையடிவாரப் பகுதி. ஆசியாவிலேயே மிகப் பெரிய இரும்பு உருக்குஉலைக்கூடங்கள் இன்றும் இருக்கும் பகுதி. இரட்டை அடுப்பு கொண்டது. 2.20 மீட்டர்நீளமும், 0.63 மீட்டர் அகலமும் 0.45 மீட்டர் ஆழமும் உடைய அடுப்பிலிருந்து இரும்புகனிமம் உருகி ஓடும் பகுதி செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்று மூன்றுஉலை அடுப்புகளுக்கு மேல் இப்பகுதியில் 3000 வருடங்களாக இருக்கின்றன. கப்பல்வாடி, வரட்டனப்பள்ளி கல்லாயுதங்கள் 55,000 வருடங்களுக்கு முந்தையவைஎன்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. குட்டூர் பகுதி கி.மு.1000-500 காலக்கட்டத்தையவை என்று சொல்லப்படுகிறது.

போடரஹள்ளி - புலிக்குத்திக்கல்

சங்க இலக்கியங்கள் எவ்வாறு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் இதுபோன்றஇடங்களுக்கும் உண்டு. ஏனென்றால் சங்க இலக்கியத்தில் தகடூர் தச்சன் வலிமை பற்றிபேசும் பாடல் உண்டு. வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே, வாளுடன் முன் தோன்றிய மூத்தகுடி என்றெல்லாம் பேசுவோம். ஆனால் கண்ணுக்கு முன்னேமூவாயிரம் வருடங்களாக அனாதையாக ஆனால் பொருள் சாட்சியாக விளங்கும் இவற்றையெல்லாம் பாதுகாக்க யாரும் அக்கறை கொள்வதில்லை. ஸ்காட்லாந்தில் இருந்து இந்தோனேசியா வரை கி.மு.3000 கி.பி. 300 வரை ஒரு பெருங்கற்கால நாகரிகம் இருந்திருக்கிறது. அவர்கள் மொழி, பண்பாடு முதலானவை இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. சிந்து சமவெளி எழுத்துக்கள் எவ்வாறு இன்றுவரை படிக்கப்படாமல் புதிராக உள்ளதோ அதுபோலவே இந்த பெருங்கற்கால நாகரிகம் தொல்லியல் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே விளங்குகிறது.

பெருங்கற்கால ஓவியத்தில் ஏர் உழும் காட்சி

இந்திய தொல்லியலின் தந்தை எனப்படும் இராபர்ட் புரூஸ்புட் கிருஷ்ண கிரி பகுதியில் அலைந்து திரிந்து கண்டறிந்த பெருங்கற்கால இடங்களெல்லாம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. கிருஷ்ணகிரி பகுதி யில் காணப்படும் தொன்மையானசான்றுகள் எல்லாமே ஆந்திர, கர்நாடகப் பகுதிகளுக்கும் பொருந்திப் போகிறது. சங்காலியா, கூர்ஜர ராவ், சுந்தரா, கா.ராஜன் மற்றும் டி. சுப்பிரமண்யம் ஆகியோர் பெருங்கற்காலத்தைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஆராய்ந்திருக்கிறார்கள்.ஆனால் இவையெல்லாம் இடங்கள் வகைகள் பற்றிய தகவல்களாகவே உள்ளன. அறிவியல்பூர்வமாக பொறியியல் கணிதவியல் கட்டிடவியல் சார்ந்து ஆய்வுகள் செய்யப்படவில்லை.


பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் பிறகு பெருங்கற்காலம் வரை வேட்டையாட கற்கால ஆயுதங்கள பயன்படுத்தியவர்கள் கி.பி.300 வரை இருந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் ராஜா ராணி யெல்லாம் தங்கம் வைத்துக்கொண்டு இருந்த அதேகாலத்தில், 2000 வருடங்களுக்கு முன் ரோமானிய நாட்டுடன் வணிகம் செய்து வந்த அதே காலகட்டத்தில் இங்கு பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மலைப்பகுதியிலும், எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கின்ற பகுதிகளிலும் தான் வசித்திருக்கிறார்கள். தமிழகத்தில் புதிய கற்கால வாழ் விடமானபையம்பள்ளி தற்போதைய வேலூர் மாவட்டத்தில் இருந்தாலும் கிருஷ்ணகிரிபகுதியைச் சார்ந்ததுதான். பையம்பள்ளியில் காண்டா மிருகத்தின் எலும்புகள்கிடைத்ததாக டாக்டர் எஸ்.ஆர்.ராவ் (கிருஷ்ண பரமாத்மாவின் துவாரகாவைஅகழ்வாய்ந்தவர்! )கண்டறிந்தார்.

பெருங்கற்கால சின்னம் என்றால் என்ன?

புதிய கற்காலத்தை அடுத்த காலகட்டத்தை பெருங்கற்காலம் என்று வரையறுக்கிறோம்.தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் இரும்புக்காலத்தை ஒட்டியதாகும். இறந்தவர்களின் ஈமப்புதைகுழிகளின் மீது பெரிய பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஈமநினைவுச்சின்னங்கள் பெருங்கற் படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் உண்டு. கற்பதுக்கைகள் (Cist) கற்கிடை (Dolmen) குத்துக்கல்(Menhir) பரல் உயர் பதுக்கை (Cairn Circle) என்று இதன் எல்லா வகைகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன.

வீரால்குடி - போரில் இறந்தவர்களுக்கான நடுகற்கோவில்

தாழிகள், ஈமப்பேழைகள் என பண்டைய மட்பாண்டங்களில் எத்தனை விதங்கள் உண்டோ அத்தனையும் இந்த பெருங்கற்கால ஈமச்சின்னங் களில் கிடைக்கின்றன.மல்லசந்திரம் கற்கிடைப்பகுதி ஒரு மலைமீது அமைந்துள்ளது. இது பண்டைய ஈமச்சின்னங்களின் காடு என்றே சொல்லலாம். எகிப்து பிரமிடுகள் போன்று காப்பாற்றப்பட வேண்டிய முக்கியமான பகுதி இது.

இந்தப்பகுதியில் என்னமாதிரியான வழிபாடு இருந்தது?

இன்றுவரைக்கும் இயற்கையோடு இயைந்த மூத்தோர் வழிபாடுதான் இருக்கிறது. இங்கு சாதாரணர்களிடம் பெருந்தெய்வங்களே கிடையாது. கங்கர்கள், நுளம்பர்கள் காலத்தியகோயில்கள் தருமபுரி பகுதியில் காணக் கிடைக்கின்றன. தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூனர் கோயில் 1100 வருடங்களுக்கு முந்தைய சமணக்கோயிலாகும். மக்களின் போக்கில்தான் வழிபாடு இருந்துள்ளது. ஒசூரிலிருக்கும் மலைக்கோயிலில் சமணத்தின் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஊரின் பெயர் செவிடப்பாடி. சாமிப்பெயர் சேவுடைநாயனார். சேவு என்றால் காளை. சந்திரசூடேஸ்வரர் என்பதே மிகவும்பிற்காலத்திய பெயர். பெருந்தெய்வங்கள் பெரிய அரசர்களின் காலத்தில்தான் வந்தன. தீர்த்த மலையில் சோழர்கள் கொடுத்த நிவந்தங்கள் பற்றிய குறிப்புள்ளது. இங்குள்ள துர்க்கைக்கு திரிசூலி என்று பெயர். அது ஏழாம் நூற்றாண்டு பொறிப்பு ஆகும். ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய பல்லவர்கால கோயில் ஒன்றுகூட தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இல்லை. வாணியம்பாடியில் உதயேந்திரத்தில் மட்டும்தான் பிற்கால பல்லவர்கால கோயில் உண்டு. கடத்தூர் பெருமாள் கோவிலில் இருப்பது திருடி கொண்டுவரப்பட்ட பல்லவர்கால செப்புத்திருமேனியாகும்.

ஆனெக்கல், கும்ளாபுரம் பகுதிகளில் கிடைக்கிற பழங்காலச் சின்னங்கள் பற்றி?

பசவண்ணருக்கு முன்பிருந்தே கும்ளாபுரம் வீரசைவர்களின் மையப் பகுதியாகஇருந்தது. 13ம் நூற்றாண்டில் எற்படுத்தப்பட்ட வீரசைவ மடம் இன்றும் உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எப்படி வாடிகன் போப்பிற்கு கட்டுப்பட்டவர்களோ அதேபோல இங்குள்ள பலசாதியினருக்கு தலைமை மடங்கள் இருந்தன. வரிவசூல்சாதி கட்டுமானம் உள்ளிட்ட நிர்வாகங்களை ஆங்கிலேயர்காலம் வரை நடத்தியிருக்கின்றன. அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இப்போது ஒரு சிலவே எஞ்சியுள்ளன.

கிருஷ்ணகிரி சையத் பாஷா மலை தொன்மையானது தானே?

சையத்பாஷா மலை என்ற பெயர் நூறுவருடத்தியதுதான். சிலர் சொல்வது மாதிரியான இந்து வரலாறு எதுவும் அதற்கு கிடையாது. கிருஷ்ணதேவராயர் மலை என்பதற்கான ஆதாரமும் இல்லை. அங்கு கங்கர்களுடைய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.அங்கிருக்கும் சமண கல்வெட்டுகள்கூட நன்கொடை வழங்கியதைப் பற்றிதான் சொல்கின்றன. 2000 வருடங்களுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் குகைஓவியங்களும் இந்த மலையில் இருக்கின்றன. வங்காளத்தில் சிராஜ் உத்தௌலாவுக்கு எதிராக பிளாசிப்போரில் பயன்படுத்திய பீரங்கி ஒன்று மைசூர் போர்களுக்காக கொண்டு வரப்பட்டு இந்த மலையில் வைக்கப்பட்டுள்ளது.

மல்லசந்திரம் பெருங்கற்கால ஈமக்கல்திட்டை

ஒசூர் பக்கமுள்ள சித்திரமேழி நல்லூரில்கூட கல்வெட்டுகள் உள்ளதுதானே?

ஆமாம். அது உழவர்கள் தமக்குள் நடத்திக்கொண்ட வணிகம்- கொடுக்கல் வாங்கல்கள் குறித்தவை. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந் தவை. மட்டுமல்ல, மனிதநாகரீகத்தின் முக்கிய ஒன்பது கண்டுபிடிப்பு களில் ஒன்றான கலப்பை, நல்லூருக்கு அருகிலுள்ள எட்ரப்பள்ளி மேல் பள்ளம் பகுதியிலுள்ள ஒரு குகையில் பாறை ஓவியமாகவே கிடைத்திருக்கிறது. அதாவது வரலாற்று தொடக்ககாலத்திய உழவு பற்றிய பதிவாக இதனைக் கொள்ளலாம். எகிப்து பிரமீடிலும் சீன மற்றும் கிரேக்க நாகரீகப்பகுதிகளிலும் மட்டுமே கலப்பை கொண்டு ஏர் உழும் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பாறை ஓவியமாகவே கிடைத்திருப்பது அரிய ஒன்று. இந்திய பாறை ஓவியங்களில் வேளாண்மை பற்றிய முதன்மையான பதிவு இதுவே. ஏனென்றால் இரும்புகாலத்திய பெருங்கற்காலத்து மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர் என்று சொல்லப்படுவதற்கு இது ஆதாரமாக விளங்குகிறது.

கிருஷ்ணகிரி பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் எவையெவை?

எட்றப்பள்ளி, கங்கலேரி, வேடர்தட்டக்கல் மற்றும் மூங்கில் புதூர் பகுதிகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதியில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் பரிமாணம் மற்றும் பிரம்மாண்டத்தை காட்டவே பிரமிடுடன் ஒரு சிறு ஒப்பீடாக சொன்னேன். உதாரணத்திற்கு வேடர் தட்டக்கல்லில் இருந்த ஒரு ஈமப் புதைக்குழியின் மேல் வைக்கப்பட்டிருந்த பரல் உயர் பதுக்கைகல்லை உடைத்து ஐந்து வீடுகளுக்கு கடைக்கால் போட்டிருக்கிறார்கள் என்றால் அதுஎவ்வளவு பெரிய கல்லாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். 2அடி தடிமன் உள்ள 15 அடிக்கு 10 அடி நீள அகலமுள்ள ஒரு பெரியசெதுக்கப்பட்ட கல்லை 2 அடி அல்லது 3 அடி உயரத்திற்கு கற்களின் மீதுஏற்றிவைத்துள்ள தொழில் நுட்பத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

கிருஷ்ணகிரி சையத் பாஷா மலையில் உள்ள பாறை ஓவியம்

1000 வருடம் பழமையுள்ள தஞ்சை பெரிய கோவிலின் சிகரம் (அது பல துண்டுகளால்ஆன கல்) மேலே கொண்டு செல்ல சாரப்பள்ளம் என்றெல்லாம் கதைவிடுகிறார்கள். ஆனால் ஒரே கல்லாலான- அதை விட ஆயிரம் மடங்கு பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஈமச்சின்னங்களைக் கண்டுகொள்ளத்தான் எவரும் இல்லை. யாரோ ஒரு சிலர் சில ஆயிரம் கோடிகள் சம்பாதிப்பதற்காக பல லட்சம் வருடங்களாக இருக்கும் மலைகளும், மானிட இனத்தின் அழியாத்தடங்களான தொல்லியல் சின்னங்களும் கிரானைட் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பெயரால் அழிக்கப்பட்டு வருகின்றன. குரல் கொடுக்கத் தான் ஒருவருமில்லை.


நன்றி
மூலம்: புதுவிசை

No comments:

Post a Comment